திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்


திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் பொதுமக்கள், நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது புஞ்சையூர் கிராமம். இந்த கிராமம் வழியாக தான் புகழ் பெற்ற திருகொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும். மேலும் விளக்குடி, கீரக்களூர், ஆலிவலம், ஆண்டாங்கரை ஆகிய பகுதி மக்களும் புஞ்சையூர் சாலை வழியாகவே செல்ல வேண்டும். இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நூதன போராட்டம்

இந்த நிலையில் தற்போது பெய்த தொடர்மழையால் அந்த சாலை மேலும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதை கண்டித்து புஞ்சையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பின்னும் சாலையை சீரமைக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story