பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு வழங்க வேண்டும் தாசில்தாரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு வழங்க வேண்டும் தாசில்தாரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை, அதற்கான பணிகள் விரைவாக நடைபெறுவதாக தாசில்தார் கூறினார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணாநகர், அம்பேத்கர் நகர் பகுதியில் வரத்து கால்வாய் ஓரமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மண்ணிவாக்கம் அண்ணாநகர், அம்பேத்கர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் நேரில் சந்தித்தார். அப்போது பொதுமக்கள், நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று கதறி அழுதபடி தங்களது குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். பணியில் இருந்த செங்கல்பட்டு தாசில்தார் இப்ராகிமிடம், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வீடுகளை இழந்தவர்களை கணக்கெடுத்து உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கான பணிகள் விரைவாக நடைபெறுவதாக தாசில்தார் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.வுடன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே.தண்டபாணி, மண்ணிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்.டி.லோகநாதன், மஞ்சுளா பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி எம்.டி.சண்முகம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பத்மநாபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.