தொழிலாளி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


தொழிலாளி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:57 AM IST (Updated: 15 Nov 2017 4:57 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தம்பேடு கிழக்கு அண்ணாநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 11–ந் தேதியன்று வேலைக்கு சென்றார். அப்போது அங்கு கூலி வழங்குவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விஜயகுமார் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நத்தம்பேடு ஏரிக்கரையில் உள்ள வேப்பமரத்தில் விஜயகுமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. விஜயகுமாரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் திருநின்றவூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று விஜயகுமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– விஜயகுமார் சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story