குருவிகுளம் எல்லை பாதுகாப்பு படைவீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்


குருவிகுளம் எல்லை பாதுகாப்பு படைவீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்
x
தினத்தந்தி 16 Nov 2017 3:00 AM IST (Updated: 15 Nov 2017 9:05 PM IST)
t-max-icont-min-icon

மிசோராம் மாநிலத்தில் இறந்த குருவிகுளம் எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருவேங்கடம்,

மிசோராம் மாநிலத்தில் இறந்த குருவிகுளம் எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்

நெல்லை மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவருடைய மகன் அருள்பிரகாஷ் (வயது 39). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் மிசோரம் மாநிலத்தில் லூங்லே என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி (28) என்ற மனைவியும், சஞ்சய் (7), நெஸ்தின் தினோ (6 மாதம்) என்ற 2 மகன்களும் உள்ளனர். சஞ்சய் அங்குள்ள பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜெயலட்சுமியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி, அருள்பிரகாஷ் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி மயங்கி விழுந்தார்

மரணம் அடைந்த அருள்பிரகாசின் உடல் ராணுவ வாகனம் மூலம் நேற்று மதியம் 12.30 மணியளவில் குருவிகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அப்போது துக்கம் தாங்காமல் ஜெயலட்சுமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

ராணுவ மரியாதையுடன் தகனம்

அருள்பிரகாசின் உடலுக்கு அவரது உறவினர்கள், பொதுமக்கள், குருவிகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பவனராஜ், அரசு ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் கமாண்டோக்கள் அருள்பிரகாசின் உடல் மீது தேசிய கொடியை போர்த்தினர்.

பின்னர் குருவிகுளம் அருகே உள்ள மயானத்துக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story