துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்


துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13–ந்தேதி 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரிய ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் நேற்று மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் உள்ள 800 விசைப்படகுகளும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 5,000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக ராமேசுவரம் கடற்கரை, துறைமுகம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பாக மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story