ராமநாதபுரத்தில் பச்சிளங் குழந்தையை விற்க முயற்சி காப்பக நிர்வாகியிடம் விசாரணை


ராமநாதபுரத்தில் பச்சிளங் குழந்தையை விற்க முயற்சி காப்பக நிர்வாகியிடம் விசாரணை
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பச்சிளங்குழந்தையை ரூ. 4 லட்சத்துக்கு பேரம் பேசி விற்க முயன்ற சம்பவம் தொடர்பாக பெண் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனியார் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர் தவிர மாற்றுத்திறனாளிகள், முதியோர்களும் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இல்லத்தை நடத்தி வரும் பானுமதி என்பவர் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்க முயன்றதாக பரபரப்பு வீடியோ வெளியானது.

பச்சிளங்குழந்தையை விற்பனை செய்ய ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பகிரங்கமாக பேரம் பேசியதாக கூறப்படும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரம் வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் கலாவதி, மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நாகநந்தினி, சப்–இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம், ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் மற்றும் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பானுமதியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூமி என்ற கதிரேசன் என்பவர் இந்த குழந்தையை கொடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்ததாகவும், தான் யாரிடமும் விற்பனை செய்ய பேரம் பேசவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழந்தையை கைப்பற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காப்பக நிர்வாகி பானுமதியை போலீசார் பஜார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆட்டோ டிரைவர் கதிரேசனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குதக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரிடம் குழந்தையை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் கதிரேசன் கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்று ஏராளமான பச்சிளங்குழந்தைகளை விற்பனை செய்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியது உறுதி செய்யப்பட்டால் காப்பக நிர்வாகி மீது சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்தல், பேரம் பேசுதல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காப்பகத்தின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆதரவற்றோர் இல்லம் நடத்திவரும் நிலையில் குழந்தையை வாங்கவோ, பராமரிக்கவோ, பாதுகாக்கவோ முடியாது என்பதால் காப்பக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story