அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்த வேண்டும்
அமராவதி அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் தற்போது அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தாராபுரம்,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னச்சாமி அனுப்பி உள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அமராவதி அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் தற்போது அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு குறைந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்பது அமராவதி பாசன விவசாயிகளின் கருத்து ஆகும். தற்போது அமராவதி பாசன விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்களை காப்பாற்ற கிணற்று நீரை வைத்தும், அமராவதி ஆற்றின் கழிவு நீரை வைத்தும் இன்னும் 20 நாட்களுக்கு நெல்பயிரை காப்பாற்ற முடியும். மேலும் இன்னும் 2 மாதங்களுக்கு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. எனவே அமராவதி அணையில் இருந்து தற்போது பாசனத்திற்கு திறந்து விட்டுள்ள தண்ணீரை நிறுத்தி, ஒரு மாதத்திற்கு பிறகு தண்ணீர் பிரச்சினை ஏற்படும்போது அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.