பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பல்லடம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சாமளாபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பல்லடம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியை கடந்துதான் வேலாயுதம்பாளையத்திற்கு செல்லவேண்டும். ஆனால் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சிலர் அந்த பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டவர்கள் கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.கே.டி.பொன்னுசாமி தலைமையில் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நீண்ட காலமாக இந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சிலர் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் பாதை மிகவும் குறுகலாகி வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இதைதொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியம் பேசினார். பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதில் கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் பாபு, பல்லடம் வட்டார தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.