அரிசி, சர்க்கரை வழங்குவதில் முறைகேடுகள் நடந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை
அரிசி, சர்க்கரை வழங்குவதில் முறைகேடுகள் நடந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிச்சாமி கூறினார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2–ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று குன்னூரில் நிக்கல்சன் கூட்டுறவு பண்டகசாலை மூலம் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் ஏ.லூயிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட இணைப்பதிவாளர் பழனிச்சாமி கலந்துகொண்டு மவுண்ட் ரோட்டில் உள்ள அம்மா மருந்தகம் முன்பு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்பு அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அம்மா மருந்தகம் மூலம் இலவச சர்க்கரை நோய் கண்டறிந்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் பியாரா ஜான், இயக்குனர்கள் வின்சென்ட் பாபு, சிவஞானம், சுரேஷ், அமல்ராஜ், பிரபு, மெகருன்னி ஷா, சந்திரா, உமாராணி, பண்டகசாலை மேலாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட இணைப்பதிவாளர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
சர்.பிரட்ரிக் நிக்கல்சன் என்பவர் இந்தியாவில் முதல் முறையாக கூட்டுறவு இயக்கத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழாவை நவம்பர் 14–ந்தேதி முதல் ஒரு வாரம் கொண்டாடி வருகின்றன. 64–வது கூட்டுறவு வார விழா கடந்த 14–ந்தேதி தொடங்கியது. வருகிற 17–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட விழாவாக ஊட்டி அண்ணா கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் அரிசி, சர்க்கரை போன்றவை பொது மக்களுக்கு சரியான முறையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதில் முறைகேடுகள் நடந்தால் புகார் கூறப்படும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கார்டுதாரர்களின் செல்போன் எண்கள் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் செல்போன் எண்ணிற்கு வாங்கிய பொருட்களின் விவரம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளில் பதிவு செய்ய வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.