உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரூ.5 லட்சம் மோசடி


உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியையிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலையில் உள்ள மாணவ–மாணவிகளின் நலன்கருதி கல்வராயன்மலை பகுதியில் 47 தொடக்கப்பள்ளிகள், 20 நடுநிலைப்பள்ளிகள், 7 உயர்நிலை பள்ளிகள், 4 மேல்நிலைப்பள்ளிகள் உண்டு உறைவிட பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகள் அனைத்தும் மாவட்ட நல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் 2 தனி தாசில்தார்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு உணவு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும், போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

மேலும் கடந்த 2015–ம் ஆண்டு கல்வராயன்மலையில் பரங்கிநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் வார்டனாக பணியாற்றிய திலகவதி, மாணவர்களின் எண்ணிக்கையை வருகை பதிவேட்டில் அதிகரித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது.

இதற்கிடையே பரங்கிநத்தம் உண்டு உறைவிடப்பள்ளியில் வார்டனாக பணியாற்றிய திலகவதி, கச்சிராயப்பாளையம் அருகே தொட்டியம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் விசாரணை நடத்துவதற்காக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் அதிகாரிகள் நேற்று கல்வராயன்மலைக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மோசடி செய்ததாக கூறப்பட்ட அப்போதைய பரங்கிநத்தம் பள்ளி வார்டன் திலகவதி மற்றும் கல்வராயன்மலையில் உள்ள தரிசக்காடு, இன்னாடு, கரியாலூர், வேம்போடு உள்ளிட்ட 7 பள்ளிகளை சேர்ந்த வார்டன்களையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் தொடக்கப்பள்ளிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து பள்ளிகளில் இருந்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story