கடலூர் மத்திய சிறைச்சாலையில் ‘ஜாமர்’ கருவி பொருத்தப்படும் வேலூர் சரக டி.ஐ.ஜி. தகவல்


கடலூர் மத்திய சிறைச்சாலையில் ‘ஜாமர்’ கருவி பொருத்தப்படும் வேலூர் சரக டி.ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2017 3:30 AM IST (Updated: 16 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறைச்சாலையில் ரூ.1 கோடி செலவில் ‘ஜாமர்’ கருவி பொருத்தப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700–க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் வெளியே கேப்பர் மலை சாலையில் உணவகம், இனிப்பு கடை உள்ளிட்ட கடைகள் சிறை கைதிகளால் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி தலைமை தாங்கினார். வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடங்களை திறந்து வைத்தார். சில கடைகளை கைதிகளே திறந்து வைத்தனர். இங்கு சிறைச்சாலை வளாகத்தில் இயற்கை உரங்கள் மூலம் விளையும் காய்கறிகளை கொண்டு இந்த உணவகங்கள் நடத்தப்படுகிறது.

பின்னர் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சிறை கைதிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற உணவகங்கள் மற்றும் கடைகள் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் வருமானத்தில் பெரும் பங்கு கைதிகளின் நலனுக்கே செலவிடப்படும்.

வருடத்திற்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் தொப்பிகள் வரை கைதிகளால் செய்யப்படுகிறது. சிறைச்சாலைகள் என்றும் கைதிகளை ஒழுங்குபடுத்தும் சீர்திருத்த பள்ளிகள் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் கைதிகளுக்கு தையல் பயிற்சி, மேல் படிப்பு தொடர உதவிகள், மன ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சிறைச்சாலை என்ற பெயரை மாற்றவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.1 கோடி செலவில் மிக விரைவில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஜாமர் கருவி பொருத்தப்பட உள்ளது. இதுவரை சென்னை, கோவை உள்ளிட்ட சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. வேலூர் சிறைச்சாலையில் பொருத்தும் பணி அமைக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இவ்வாறு டி.ஐ.ஜி. பாஸ்கரன் கூறினார்.


Next Story