வாய்க்காலின் கடை மடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்து சேராததால் 7,600 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு


வாய்க்காலின் கடை மடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்து சேராததால் 7,600 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் கடை மடை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேராததால் 7,600 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மதகுகளை சீரமைத்து வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வரை காவிரியில் 17 கிளை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்களின் மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டாலும் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதி இந்த வாய்க்கால்களில் விடப்படும். இதன் காரணமாக இந்த வாய்க்கால்களில் எப்போதும் தண்ணீர் செல்வதை காண முடியும்.

பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்

இந்த 17 வாய்க்கால்களில் ஒன்று பழைய கட்டளை மேட்டு வாய்க்கால். இந்த வாய்க்கால் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரிந்து திருச்சி மாவட்டம் தாயனூர் பகுதியில் நிறைவடைகிறது. 61 கி.மீ நீளம் உள்ள இந்த வாய்க்காலின் மூலம் 20 ஆயிரத்து 550 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் கடந்த 1934-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

இந்த வாய்க்காலின் தலைப்பு பகுதியாக கரூர் மாவட்டம் வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, இரணியமங்கலம், நச்சலூர் பகுதிகளும், கடை மடை பகுதி களாக திருச்சி மாவட்டத்தின் நெய்தலூர் காலனி, பனையூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, கோப்பு, சூரியனூர், மேலப்பட்டி, பாறைப்பட்டி, கவுண்டம்பட்டி, குறிச்சி மற்றும் புலியூர், போசம்பட்டி, கொய்யா தோப்பு, அதவத்தூர், சுண்ணாம்பு காரன்பட்டி, பள்ளக்காடு, தாயனூர் பகுதிகளும் உள்ளன.

7,600 ஏக்கர் பாசனம் பாதிப்பு

பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் கரூர் மாவட்டம் மாயனூர் முதல் தாயனூர் வரை 32 மதகுகள் உள்ளன. இதில் 26வது எண் கொண்ட மதகின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வாய்க்காலில் தண்ணீர் சரியாக வராத காரணத்தினால் இதுவரை நெல் சாகுபடி பணி தொடங்கப் படவில்லை.

கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சில விவசாயிகள் மட்டும் வாழை பயிரிட்டு உள்ளனர். 26-ம் எண் மதகு மட்டும் இன்றி இதனை தாண்டி 27 முதல் 32 வரை உள்ள மதகின் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் தற்போது தரிசாக தான் உள்ளது.

தூர்வார நடவடிக்கை

இது தொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்கத்தின் துணை தலைவர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் கூறுகையில் ‘பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூர் தடுப்பணையில் இருந்து அரசு உத்தரவு படி வினாடிக்கு 411 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் கடை மடை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் கடை பகுதியில் 26-ம் எண் மதகின் மூலம் பாசன வசதி பெறும் கிராமங்கள் உள்பட மொத்தம் 7,600 ஏக்கர் இந்த ஆண்டும் தரிசாக தான் கிடக்கிறது. இந்த வாய்க்காலின் தலைப்பு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மேலேற்று பாசனம் என்ற முறை மூலம் விதிமுறைகளை மீறி வாய்க்காலில் குழாய்களை பொருத்தி தங்களது கிணறுகளுக்கு தண்ணீரை எடுத்து விடுகிறார்கள். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இந்த வாய்க்காலில் உள்ள அனைத்து மதகுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அதனை சீரமைக்க வேண்டும். வாய்க்காலில் பல இடங்களில் மரங்கள் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. வாய்க்காலை தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால் தண்ணீர் தங்கு தடையின்றி வருவதிலும் பிரச்சினை உள்ளது. எனவே மதகுகளை சீரமைத்து வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் கடை பகுதியில் தண்ணீரை காண்பது என்பது கானல் நீராக போய் விடும்’ என்றார்.


Next Story