தொளசம்பட்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள்-கடைகள் அகற்றம்


தொளசம்பட்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள்-கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

தொளசம்பட்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன.

ஓமலூர்,

ஓமலூர் அருகே தொளசம்பட்டி டி.மாரமங்கலம் கிராமத்தில் 2 ஏரிகள் உள்ளன. இந்த 2 ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 75 வீடுகள் மற்றும் கடைகள் போன்றவற்றை கட்டி இருந்தனர். இது தவிர ஏரியை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.

இந்த 2 ஏரிகளையும் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த 22.2.2016 அன்று, ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

இதன்பின்னர் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 75 வீடுகளுக்கு வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வருவாய்த்துறை மூலம் அகற்றப்படும், என குறிப்பிட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் குடியிருக்க தங்களுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களில் 52 பேருக்கு வேறு இடத்தில் குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அதன்பின்னரும் நீர்பிடிப்பு பகுதியில் கட்டி இருந்த வீடுகள், கடைகள் போன்றவற்றை அகற்றாமல் இருந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்தநிலையில் நேற்று காலை பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர்கள் தேன்மொழி, வேதநாராயணன், மண்டல துணை தாசில்தார்கள் அருள்பிரகாஷ், செந்தில்குமார், வருவாய் அலுவலர் லலிதாஞ்சலி மற்றும் பணியாளர்கள் 10 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர். ஏரி நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினார்கள்.

இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story