நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: தலைமை செயலாளரிடம் பா.ஜ.க.வினர் புகார்


நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: தலைமை செயலாளரிடம் பா.ஜ.க.வினர் புகார்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:45 AM IST (Updated: 16 Nov 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை மாநில சட்டசபைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும். ஆனால் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் பரிந்துரை இல்லாமலேயே கவர்னர் கிரண்பெடி பரிந்துரையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

இதனை பின்பற்றி புதுச்சேரி அரசிதழில் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி இரவோடு இரவாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு சட்டப்பேரவையில் இடமளிக்க 3 பேரும் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கோரிக்கை அளித்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு சென்றனர். அங்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமாரை சந்தித்து நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்தனர். மேலும் தங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்து பிறப்பித்த உத்தரவு, அதனைப் பின்பற்றி புதுச்சேரி அரசிதழில் வெளியான அரசாணை ஆகியவைகளை கொடுத்தனர்.

மேலும் சபாநாயகர் வைத்திலிங்கம் தங்களை நிராகரித்த வி‌ஷயத்தை தெரிவித்தனர். பின்னர் தங்களுக்கு சட்டப்பேரவையில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அப்போது அவர், இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதி அளித்தார்.

பின்னர் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அதை பின்பற்றி மாநில அரசும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. கவர்னரும் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து வருகிறார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சபாநாயகர் வைத்திலிங்கம் செயல்படுகிறார். மத்திய அரசின் உத்தரவையும், மாநில அரசின் ஆணையையும் ஏற்க மறுக்கின்றார். இது தொடர்பாக தலைமை செயலரை சந்தித்து ஆதாரங்களை கொடுத்துள்ளோம்.

அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். எனவே விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம். 23–ம் தேதி சட்டசபை கூடும்போது 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் நாங்கள் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பிறப்பித்த அரசாணையை எடுத்துக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக ஒரு மாநிலத்தின் சபாநாயகர் செயல்படுவது இதுதான் முதல் முறை.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் இந்த வி‌ஷயத்தில் முடியாது என கூறுகின்றது. இதற்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமன உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இல்லை என்று கூறுகின்றனர். எப்போதுமே ஜனாதிபதி கையொப்பம் இருந்தது இல்லை.

சபாநாயகர் வைத்திலிங்கம் முதல்–அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். அதை முதல்–அமைச்சர் நாராயணசாமி பறித்துக் கொண்டதால், அவரின் ஆட்சியை முடக்க திட்டமிட்டு சதி செய்து வருகிறார். கவர்னர் புதுச்சேரி திரும்பியவுடன் அவரிடமும் இது குறித்து புகார் தெரிவிப்போம். நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் மற்றும் செல்வகணபதி கட்சியின் மேலிட நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்க சென்னைக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story