அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மெக்கானிக்கிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மெக்கானிக்கிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுவை கன்னியக்கோவில் சுள்ளியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42), மெக்கானிக். பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவராஜ் (30), தான் அரசு ஊழியர் என்றும், புதுவையில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என்று கூறி சந்திரசேகரிடம் அறிமுகமானார்.

இந்த நிலையில் சந்திரசேகரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சிவா கூறினார். இதை நம்பி சந்திரசேகர் பல்வேறு தவணையில் மொத்தம் ரூ.5 லட்சத்தை சிவாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சிவா, வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுபற்றி அவரிடம் சந்திரசேகர் கேட்டபோது, சிவா தகராறு செய்து, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிவா அரசு ஊழியர் இல்லை என்பதும், வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியில் சிவா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிவாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story