சிறுவனை கடத்தி கொன்ற 2 வெல்டர்கள் கைது


சிறுவனை கடத்தி கொன்ற 2 வெல்டர்கள் கைது
x
தினத்தந்தி 16 Nov 2017 4:31 AM IST (Updated: 16 Nov 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.4 லட்சம் பறிப்பதற்காக சிறுவனை கடத்தி கொன்ற 2 வெல்டர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை பவாயை சேர்ந்தவர் பப்லுசிங். எலக்ட்ரீசியன். இவருக்கு 10 வயதில் ரிதேஷ் என்ற மகன் இருந்தான். பவாயில் பப்லுசிங்கின் வீட்டின் அருகே உள்ள தொழிற்பட்டறை ஒன்றில் அவரது சொந்த ஊரை சேர்ந்த அமர்சிங்(வயது20), லாலு சிங்(20) ஆகிய இரண்டு வாலிபர்கள் வெல்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

அந்த தொழிற்பட்டறைக்கு சிறுவன் ரிதேஷ் அடிக்கடி சென்று இருவருடனும் பேசி கொண்டிருப்பான் என்று கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்பட்டறைக்கு வந்த சிறுவன் ரிதேஷ் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பப்லுசிங் தொழிற்பட்டறைக்கு சென்று அமர்சிங், லாலுசிங் இருவரிடமும் விசாரித்தார். ஆனால் அவர்கள் சிறுவனை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து அவர் பவாய் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், சம்பவத்தன்று அமர்சிங்குடன் ரிதேஷ் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அமர்சிங்கை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அமர்சிங்கும், லாலுசிங்கும் சேர்ந்து சிறுவன் ரிதேசை கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பப்லுசிங்கிடம் அதிகளவில் பணம் இருப்பதாக கருதிய இருவரும் அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறுவன் ரிதேசை பயந்தரில் உள்ள லாலுசிங்கின் வீட்டிற்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து சிறுவனை 2 பேரும் கழுத்தை நெரித்து கொன்றனர் என்பது தெரியவந்தது.

ரிதேஷின் உடலை ஆசாத் நகர் பகுதியில் உள்ள சாக்கடை பகுதியில் வீசியதாக போலீசாரிடம் அமர்சிங் கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.



Next Story