திருத்தணி அருகே கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுப்பு
திருத்தணி அருகே கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமிவிலாசபுரம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதருக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மர்மநபர்கள் அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். அவரது கால்கள் இரண்டும் பின்னால் மடக்கப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்தது.
பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் கிடந்த பகுதியில் போலீசார் தேடி பார்த்தும் பெண்ணின் தலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கொலையான பெண் நீலநிற சேலை அணிந்து உள்ளார். இந்த அடையாளங்களுடன், அவரது உடலில் உள்ள மற்ற அடையாளங்களையும் வைத்து அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் பெண்ணின் தலையை தேடி வந்தனர். இந்த நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது. உடனே தலையை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த பெண்ணின் ஆடைகள் அலங்கோலமான நிலையில் கிடந்தது. எனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் மாயமான பெண்களின் பெயர் பட்டியலை சேகரித்து அதன் மூலம் அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.