கயத்தாறு அருகே, மர்மநோய் தாக்கியதில் ஒரே வாரத்தில் 65 ஆடுகள் சாவு
கயத்தாறு அருகே மர்மநோய் தாக்கியதில் ஒரே வாரத்தில் 65 ஆடுகள் உயிரிழந்தன.
கயத்தாறு,
கயத்தாறு அருகே மர்மநோய் தாக்கியதில் ஒரே வாரத்தில் 65 ஆடுகள் உயிரிழந்தன.
மர்மநோய் தாக்கியதால்...கயத்தாறு அருகே உள்ள குப்பனாபுரம், மேல இலந்தைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர். இந்த நிலையில் மேல இலந்தைகுளம், குப்பனாபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஆடுகளை மர்மநோய் தாக்குவதால் உயிரிழக்கின்றன.
மேல இலந்தைகுளத்தை சேர்ந்த உலகநாதனுக்கு (வயது 29) சொந்தமான 4 ஆடுகள் மர்மநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவில் இறந்தன. அவருக்கு சொந்தமான 21 ஆடுகளும் கடந்த வாரம் மர்மநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த உலகுகோனார் மகன் பட்டன் என்பவருக்கு சொந்தமான 25 ஆடுகளும், சு.பட்டன் என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகளும், குப்பனாபுரத்தை சேர்ந்த ராசாத்தேவருக்கு சொந்தமான 5 ஆடுகளும் கடந்த ஒரு வாரத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தன.
விவசாயிகள் கோரிக்கைநோய் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க வருமாறு தேவர்குளம் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் முறையிட்டும், டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்கவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இறந்த ஆடுகளை புதைக்காமல், அவற்றை முட்செடிகளிலும், பாழடைந்த கிணற்றிலும் அவர்கள் வீசி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழைக்காலங்களில் கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் மர்மநோய் தாக்குவதால் ஆடுகள் உயிரிழக்கின்றன.
எனவே மேல இலந்தைகுளம், குப்பனாபுரம் பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி, நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். மர்மநோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.