மதுரவாயலில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 3 மாதங்களுக்குள் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி,
மதுரவாயல் ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், 2–வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 24). தச்சுத்தொழிலாளி. இவருக்கும், சிவரஞ்சனி(22) என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணமானது.
கடந்த சில வாரங்களாக புதுப்பெண் சிவரஞ்சனி, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் கணவன், மனைவி இருவரும் தூங்கச்சென்று விட்டனர்.
நேற்று காலையில் சாமிநாதன் எழுந்து பார்த்தபோது சிவரஞ்சனியை காணவில்லை. அவரை தேடிய போது, வீட்டின் மற்றொரு அறையில் சிவரஞ்சனி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சிவரஞ்சனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பெண் சிவரஞ்சனி, எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 3 மாதங்களுக்குள் சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.