‘ஆகாஷிடம் இருந்து இந்துஜாவை காப்பாற்ற கடுமையாக போராடினோம்’ தங்கை வாக்குமூலம்


‘ஆகாஷிடம் இருந்து இந்துஜாவை காப்பாற்ற கடுமையாக போராடினோம்’ தங்கை வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Nov 2017 5:30 AM IST (Updated: 17 Nov 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெண் என்ஜினீயர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆகாஷிடம் இருந்து அக்காள் இந்துஜாவை காப்பாற்ற கடுமையாக போராடியதாக உடல் கருகி காயம் அடைந்த அவரது தங்கை நிவேதா, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் இந்துஜா (வயது 22) என்பவரை காதல் தகராறில் ஆகாஷ் (22) என்ற வாலிபர் கடந்த 13–ந்தேதி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றார்.

இதனை தடுக்க வந்த இந்துஜாவின் தாயார் ரேணுகா (45), தங்கை நிவேதா (20) ஆகியோர் மீதும் ஆகாஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த ரேணுகா, நிவேதா ஆகியோர் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் உயிருக்கு போராடும் நிவேதா, போலீசாரிடம் கண்ணீர் மல்க அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:–

சம்பவம் நடந்த அன்று(கடந்த 13–ந்தேதி) இரவு 9 மணிக்கு எங்கள் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. எனது தாயார் ரேணுகா, கதவை திறந்தார். அப்போது ஆகாஷ் வெளியில் நின்று கொண்டிருந்தார்.

என்ன வி‌ஷயம்? என்று விசாரித்த போது, இந்துஜாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினார். இதனால் ஆகாஷை வீட்டுக்குள் அனுமதித்தோம். வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்து இந்துஜாவுடன் ஆகாஷ் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆகாஷ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து இந்துஜா மீது ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நானும், எனது தாய் ரேணுகாவும் ஓடிச் சென்று ஆகாசை தள்ளிவிட்டோம். அப்போது அவர், எங்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றினார். திடீரென சிகரெட் லைட்டரை பற்ற வைத்து விட்டார். இதில் எங்கள் 3 பேர் மீதும் தீ பரவியது.

இந்துஜாவை காப்பாற்ற கடுமையாக போராடிய நாங்களும் தீயில் கருகினோம். அலறல் சத்தம் கேட்டு கீழ்தளத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை தள்ளி விட்டு விட்டு ஆகாஷ் ஓடிவிட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வீட்டிலேயே இந்துஜா இறந்து விட்டாள். எவ்வளவோ போராடியும் எனது அக்காள் இந்துஜாவை ஆகாஷிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story