8 ஆயிரம் விவசாயிகள், பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து உள்ளனர் கலெக்டர் தகவல்


8 ஆயிரம் விவசாயிகள், பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து உள்ளனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 8 ஆயிரம் விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து உள்ளனர் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளில், கடன் பெறாதவர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், கடலூர் செம்மண்டலம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலும் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்ட கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இதுவரை 88 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்

நடப்பு ஆண்டில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் அவர்களாக இத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 8 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பிரிமீய தொகை செலுத்தியுள்ளார்கள்.

எனவே, கடன் பெறாத விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் ஏக்கருக்கு ரூ.390 வீதம் பிரிமீய தொகையினை செலுத்தி நெற்பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசிநாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.

60 ஆயிரம் பேர் சேர வேண்டும்

கடந்த ஆண்டு 57 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பிரிமீயம் செலுத்தினார்கள். நடப்பு ஆண்டில் 60 ஆயிரம் பேருக்கு மேல் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறவேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

இதனை தொடர்ந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு ரசீதை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை இணை இயக்குனர் நாட்ராயன், வேளாண்மை துணை இயக்குனர்கள் ஆர்.சம்பத்குமார் (மாநில திட்டம்), வ.கனகசபை (மத்திய திட்டம்), உதவி இயக்குனர்கள் எஸ்.பூவராகவன், பாலசுப்ரமணியன் (தரக்கட்டுப்பாடு), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சோ.இளஞ்செல்வி, துணைப்பதிவாளர் கா.சுந்தர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் டி.தனராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story