புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாணவர்களுடன் பொதுமக்கள் பஸ் மறியல்


புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாணவர்களுடன் பொதுமக்கள் பஸ் மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:30 AM IST (Updated: 17 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூரில் கட்டப்பட்டு வரும் புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நொச்சியத்தில் நேற்று காலை பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் காந்தி பூங்கா அருகில் உள்ள புள்ளம்பாடி, பெருவளை மற்றும் பங்குனி வாய்க்கால்களில் இருந்த 3 பாலங்கள் பலவீனமடைந்ததால் அதற்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இதையடுத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளன.

பஸ், லாரி, கார், வேன் போன்ற வாகனங்கள் மண்ணச்சநல்லூரில் இருந்து திருச்சி செல்வதற்கு சமயபுரம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் டோல்கேட்டில் இருந்து நொச்சியம் வழியாக மண்ணச்சநல்லூர் அரசு பள்ளிகள், கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் மண்ணச்்சநல்லூரில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் தாங்கள் படும் வேதனையை தெரிவித்து உள்ளனர்.

புதியபாலங்களின் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரி நேற்று காலை 8 மணிக்கு திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள நொச்சியத்தில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென்று பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் பேச்சு வார்த்தைக்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் கூட்ட அறையில் வட்டாட்சியர் மகாலெட்சுமி, சிறுகாம்பூர் பகுதி வரி ஆய்வாளர் செந்தில், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் விஜயகானந்தன், போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் வேலுசாமி ஆகியோர்் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மண்ணச்சநல்லூருக்கு வரும் அரசு பஸ்கள் காலை நேரத்தில் மண்ணச்சநல்லூரில் உள்ள கோபால் திருமண மண்டபம் வரை தினமும் வருவது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், தனியார் பஸ்கள் கோபால் திருமண மண்டபம் வரை வந்து திரும்பி செல்வதற்கு எவ்வித தடையும் இன்றி இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நொச்சியத்தில் இருந்து டோல்கேட் வரை மாணவ, மாணவிகளின் நலன் கருதி திருச்சி-சேலம் வழியாக செல்லும் பஸ்கள் நொச்சியத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சமாதானமடைந்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் வழியாக திருச்சிக்கு சுற்றி சென்றன. 

Next Story