இடுகாட்டில் புகுந்து சமாதிகளை உடைத்து சேதப்படுத்தினர் அரசு ஊழியர் உள்பட 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வில்லியனூர் அருகே இடுகாட்டில் புகுந்து சமாதிகளை உடைத்து சேதப்படுத்தினர் அரசு ஊழியர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே எஸ்.எஸ்.நகர் பகுதியில் இடுகாடு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக அதில் உள்ள சமாதிகளும், சிவலிங்கங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அது தொடர்பாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை ஊழியர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே வள்ளுவன்பேட் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் யாராவது இறந்தால் அருகே உள்ள எஸ்.எஸ்.நகர் பகுதியில் இடுகாட்டில் இறந்தவர்களை புதைத்து வந்தனர். மேலும் அதில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களின் முன்னோர்களின் சமாதியும் உள்ளது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த இடுகாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். அதனால் அவ்வப்போது வள்ளுவன்பேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் இடுகாட்டுக்கு பிணத்தை எடுத்துச் செல்லும்போது அவர்களை தடுத்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று யாரோ மர்ம மனிதர்கள் இடுகாட்டில் இருந்த சமாதிகளையும், சிவலிங்கத்தையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். அதை அறிந்ததும் வள்ளுவன்பேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். சமாதியும், சிவலிங்கங்களும் உடைந்து கிடப்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து வள்ளுவன்பேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை ஊழியர் புண்ணியகோடி (வயது 45) மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சமாதியையும், சிவலிங்கத்தையும் உடைத்து சேதப்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து புண்ணியகோடி மற்றும் அவருடைய நண்பர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.