வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி புதிய செயலி மூலம் தொடங்கியது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி புதிய செயலி மூலம் தொடங்கியது
x
தினத்தந்தி 17 Nov 2017 5:17 AM IST (Updated: 17 Nov 2017 5:17 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி புதிய செயலி மூலம் தொடங்கியது. அந்தப் பணியை, வேலூரில் தாசில்தார் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

தேர்தல் ஆணையம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் 3–ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி வருகிற 31–ந்தேதி வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி, சிறப்பு இயக்கம் மூலம் நடக்கிறது. சிறப்பு இயக்கத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்கள், விடுபட்ட வாக்காளர்கள், எதிர்கால இளம் வாக்காளர்கள், வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள், வாக்குச்சாவடி விவரம் மற்றும் தபால் நிலைய விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து, அதனை கணினியில் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், படிவங்களை பூர்த்தி செய்து, அதனை கணினியில் பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஏற்படும் என்பதால், துல்லியமான கணக்கெடுப்பினை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான புதிய செயலியை (மொபைல் ஆப்) தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. சிறப்பு இயக்கம் தொடர்பான பணிகளை அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் புதிய செயலி மூலம் செய்திட பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் பணி நேற்று தொடங்கியது.

வேலூர் தொரப்பாடி பிள்ளையார் கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை புதிய செயலி மூலம் தாசில்தார் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர், புதிய செயலி மூலமாக வீடு வீடாக சென்று புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஒரு வீட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதில் புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம், மாற்றம் போன்ற அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களையும், கள்ள ஓட்டுப் போடுவதைவும் தவிர்க்க முடியும். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றார்.



Next Story