வேலப்பாடியில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி


வேலப்பாடியில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Nov 2017 5:29 AM IST (Updated: 17 Nov 2017 5:29 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் வேலப்பாடியில் குடிநீருடன், சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

வேலூர் வேலப்பாடியில் பெரியதனம் சுப்பிரமணியமுதலியார் தெரு, நல்லான்பட்டறை தெரு, மரக்கடை கந்தமுதலி தெரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சாக்கடை கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து சாக்கடை கலந்த குடிநீரையே குழாய்களில் பிடித்து பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை சரிசெய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதற்கான பணியையும் அவர்கள் தொடங்கினர். ஆனால், எந்த இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கலக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் செல்லும் பகுதிகளில் பெரிய பெரிய பள்ளம் தோண்டியும் குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

டெங்கு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, சுகாதார மற்ற முறையில் தண்ணீர் தேங்கியிருந்தால் அபராதம் விதிக்கும் அதிகாரிகள், குடிநீரில் சாக்கடை கலந்து வருவது குறித்து தகவல் தெரிவித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் இனியாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story