சிலிர்க்க வைத்த சில்லறை பரிசு!
ராஜஸ்தான் உதய்ப் பூரைச் சேர்ந்த யாஷ் கற்பனை செய்ய முடியாத பரிசு ஒன்றை, தன்னுடைய அக்கா ரூபெல்லிற்கு கொடுத்திருக்கிறார்.
அக்காவிடம் இருந்து பரிசுகளை எதிர்பார்க்கும் தம்பிகளுக்கு மத்தியில், ராஜஸ்தான் உதய்ப் பூரைச் சேர்ந்த யாஷ் வித்தியாசமானவர். ஏனெனில் கற்பனை செய்ய முடியாத பரிசு ஒன்றை, தன்னுடைய அக்கா ரூபெல்லிற்கு கொடுத்திருக்கிறார். அதுவும் 65 ஆயிரம் விலை மதிப்புள்ள புத்தம் புதிய மோட்டார் வண்டியாம். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுக சிறுக பணம் சேமித்த யாஷ், தன்னுடைய அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் ஷோரூமிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த மோட்டார் வாகனங்களின் விவரங்களை விசாரித்ததோடு, சில வண்டிகளை ஓட்டி பார்த்திருக்கிறார்கள். ரூபெல்லிற்கு ஒரு வண்டி பிடித்து போக உடனே வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.
‘எனக்கு பெரிய ஆச்சரியம். ஏனெனில் தம்பி சாதாரணமாக தான் கடைக்கு அழைத்துச் சென்றான். நான் விளையாட்டாக ஒரு வண்டியை காண்பித்து வாங்கலாம் என்றேன். அவன் உடனே வாங்கி கொடுத்துவிட்டான்’ என்று ரூபெல் ஆச்சரியப்படுகிறார்.
‘நிறைய பேர் ஷோரூமிற்கு வருவார்கள். விலை கேட்பார்கள். கிளம்பி விடுவார்கள். அப்படிதான் இவர்களையும் நினைத்தேன். ஆனால் சட்டென்று அக்காவிற்கு வண்டியை வாங்கி கொடுத்துவிட்டான். இதில் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. ஏனெனில் 65 ஆயிரத்தையும் பையன், 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தான். அந்தப் பெரிய நாணய மூட்டையை 5 ஊழியர்களை வைத்து எண்ணி முடித்தோம்’ என்று ஆச்சரியப்படுகிறார், கடை ஊழியர். பாக்கெட் மணியை சேகரித்து, அக்காவிற்கு அன்பு பரிசு கொடுத்த நம்ம ஹீரோவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Related Tags :
Next Story