தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.538½ கோடி பயிர்க்கடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.538½ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.538½ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கூட்டுறவு வாரவிழா
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தூத்துக்குடி கனிபேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்று பேசினார். வங்கி மேலாண்மை இயக்குனர் லட்சுமி திட்டம் குறித்து விளக்கி பேசினார். துணை பதிவாளர் ராஜேந்திரன் கூட்டுறவு உறுதிமொழி வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கூட்டுறவு வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு மற்றும் ரூ.1 கோடியே 94 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கூட்டுறவு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பயிர்க்கடன்
நம் நாடு விவசாய மக்களை அடிப்படையாக கொண்ட நாடு. அந்த மக்கள் தனியார் வங்கி, நிறுவனங்களில் கடன் பெற்று வந்தனர். இதனால் எம்.ஜி.ஆர். கிராமங்கள் தோறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கினார். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கூட்டுறவு கடன்களை மக்கள் எளிதில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 76 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கு ரூ.538 கோடியே 50 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 5 ஆயிரத்து 804 விவசாயிகளுக்கு ரூ.38 கோடியே 72 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளளது. வேளாண் கடன் தள்ளுபடி 2016 திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 189 விவசாயிகளுக்கு ரூ.75 கோடியே 32 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2015–ம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 379 சிறுவணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2016–17–ம் ஆண்டில் பயிர் காப்பீடு தொகை ரூ.1 கோடியே 4 லட்சத்து 13 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. 2015–16–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையில் சிலருக்கு விடுபட்டு இருக்கிறது. உரிய விசாரணை நடத்தி குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கலெக்டர் வெங்கடேஷ்
விழாவில் கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது, கிராமப்புற அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.465 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதனை ரூ.500 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கால கடன்கள் அக்டோபர் மாதம் வரை ரூ.5 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை ரூ.10 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி கடந்த 2012–13–ம் ஆண்டில் ரூ.2 கோடியே 32 லட்சத்து 68 ஆயிரம் லாபம் ஈட்டியது. 2016–17–ம் ஆண்டில் ரூ.5 கோடியே 2 லட்சத்து 22 ஆயிரம் லாபம் ஈட்டி உள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக வங்கி லாபத்தில் இயங்கி வருகிறது. இதற்கான உழைத்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணைய தலைவர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.