நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் அருகே நடந்த விபத்தில் பிளஸ்–2 மாணவி பலி
நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் அருகே நடந்த விபத்தில் பிளஸ்–2 மாணவி தலை நசுங்கி இறந்தார். அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
நாகர்கோவில்,
சத்யஸ்ரீ கோர்ட்டு ரோட்டில் உள்ள டதி பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். சத்யஸ்ரீயை தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு, அவருடைய அண்ணன் ஹரி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுவிடுவார்.
அதுபோல் நேற்று காலையிலும் சத்யஸ்ரீ தன் அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கூடம் புறப்பட்டார். 2 பேரும் கலெக்டர் அலுவலக சந்திப்பை கடந்து டதி பெண்கள் பள்ளிக்கூடம் அருகே சென்றபோது கல்லறை தோட்ட சாலை வழியாக ஒரு மினி லாரி பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு வந்தது.
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சத்யஸ்ரீ தூக்கி வீசப்பட்டு மினி லாரியின் சக்கரத்தின் அடியில் விழுந்தார். இதனால் சத்யஸ்ரீ மீது மினி லாரி ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதனால் அந்த இடம் முழுவதும் ரத்த கரையாக காட்சியளித்தது.
மேலும், சத்யஸ்ரீ கொண்டு வந்த புத்தங்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஹரிக்கு உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள் மட்டும் ஏற்பட்டது. கண் எதிரே தன் தங்கை இறந்ததை பார்த்த ஹரி செய்வதறியாது திகைத்து நின்றார்.
இதுபற்றிய தகவல் அறிந்த சத்யஸ்ரீயின் தாயார் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் அங்கு ஓடி வந்து சடலமாக கிடந்த சத்யஸ்ரீயை பார்த்து கதறி அழுதனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சத்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் டிரைவர், மினி லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் வந்து மினி லாரியை அங்கிருந்து அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்–2 மாணவி சத்யஸ்ரீ கோர விபத்தில் பலியான சம்பவம் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மிகவும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. சத்யஸ்ரீயுடன் படிக்கும் மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். மாணவி இறப்பு காரணமாக டதி பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
மாணவி சத்யஸ்ரீ பலியான சம்பவம் நாகர்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இல்லை எனில் மணிமேடை சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு இருப்பதைப் போல், மற்ற சந்திப்புகளிலும் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.