ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்படவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்படவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 18 Nov 2017 4:00 AM IST (Updated: 18 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்படவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 14–ந்தேதி தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அவரிடம், ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு கிடைப்பதில்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ஒரு ரே‌ஷன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்ய, 21 ஆயிரம் மெட்ரிக் டன் மைசூர் பருப்பு, துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம். இவற்றில் எதாவது ஒரு பருப்பு ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும். இந்த மூன்றில் ஒரு பருப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது, உளுந்தம் பருப்பை கொடுப்பதாக அரசு சொல்லவில்லை என தெரிவித்தார்.

அதாவது, ரே‌ஷனில் தற்போது உளுந்தம் பருப்பு வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு பதில் 3 வகையான பருப்பில் ஏதாவது ஒன்று கிடைக்கும் என்ற தகவலை அவர் சொல்லி இருந்தார்.

இதற்கு நேர்மாறான தகவலை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார். அவர், ரே‌ஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்படவில்லை என்றும், அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் முரண்பட்ட தகவலை கூறி உள்ளார்.

நேற்று, திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அவரிடம், ரே‌ஷனில் உளுந்தம் பருப்பு வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘அப்படி கிடையாது. மக்களுக்கு நன்மை தரும் எந்த திட்டத்தையும் அரசு நிறுத்தாது. அது தவறான தகவல். அப்படி எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை’ என்றார்.

அமைச்சர் காமராஜ் அளித்த தகவலும், அமைச்சர் சீனிவாசனின் பேட்டியும் முரணாக இருப்பதால், எது சரியானது? என்பது தெரியாமல் மக்கள் குழம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story