தமிழகத்தில் 800 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் 800 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கோவை,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றுக்காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்காக அதிநவீன சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். இறந்தவர்களை கொண்டு செல்லும் அமரர் ஊர்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை அளிப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் முழுவதும் ரூ.23 கோடியே 50 லட்சம் மதிப்பில் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களை குறைந்த நேரத்தில் கணக்கிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் மற்றும் டாக்டர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் டீன் அலுவலகம் நோக்கி நடந்து சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த நர்சுகள், கோவை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக நர்சுகள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக 400 நர்சுகள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரத்தையொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குழந்தைகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–
சென்னை அரசு ஆஸ்பத்திரி மருத்துவத்தின் தலைநகரமாக இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் நெல்லை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு புதிய பிரிவுகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெய்கா திட்டம் மூலம் ஜப்பான் அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை குளோபல் மருத்துவமனையுடன் இணைந்து 21 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் 8 பேருக்கு இதயநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிசு இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் 7–வது மாதத்தில் வழங்கப்பட்டு வந்த 4 ஆயிரம் ரூபாய் தற்போது 5–வது மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதை தாய்மார்கள் தங்கள் உடல் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குழந்தைகள் நல வார்டில் 700 கிராம் எடையில் பிறந்த குறை மாத குழந்தையைகூட டாக்டர்களும், நர்சுகளும் காப்பாற்றி உள்ளனர். அந்த அளவிற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழக சுகாதார திட்டத்துக்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரத்து 600 கோடியை உலக வங்கி ஒதுக்கி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 40 சி.டி. ஸ்கேன் விரைவில் வழங்கப்படும். இதில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 2 சி.டி.ஸ்கேன் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள நர்சு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். 10 ஆயிரம் நர்சுகள், 724 டாக்டர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.