டி.டி.வி.தினகரன் தவறு செய்யவில்லை என்றால் ஏன்பயப்பட வேண்டும்; தமிழிசை சவுந்தரராஜன்
டி.டி.வி. தினகரன் போலி துணிச்சலுடன் உள்ளார். அவர் தவறு செய்யவில்லை என்றால் வருமான வரிசோதனையை கண்டு ஏன்பயப்பட வேண்டும் என்று கோவையில் பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை,
பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தது, எதிர்கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வுதான். இந்த ஆய்வை தமிழக அமைச்சர்கள் வரவேற்று, கவர்னர் தமிழகத்தில் எங்கு ஆய்வு நடத்தினாலும் மகிழ்ச்சி தான் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே இதில் எதிர்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
கவர்னர் ஏதோ சட்டமன்றத்தை கூட்டியதை போல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். அவர், அவருக்குள்ள அதிகாரத்துக்கு உட்பட்டுதான் ஆய்வுகளை நடத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின் கவர்னர் இந்த ஆய்வுகளை இத்தோடு முடித்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். தமிழகத்துக்கு முழு நேர கவர்னர் வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோகித் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆய்வு நடத்தியதை எதிர்க்கிறார்கள்.
இந்த ஆய்வை எதிர்க்க வேண்டிய அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏன் கோபம் என்று தெரியவில்லை. ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்து இருந்தால் தன்னோடு இருந்தவர்கள் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு இருப்பார்.
டி.டி.வி. தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்?. மதுவிலக்கை முழுமையாக கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜனதாவின் விருப்பம். இதில் அந்த அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் தமிழகத்தை ஆட்சி செய்வோம். அது கவர்னரை வைத்து அல்ல. தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற்று நேரடியாக ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்கள் வருமாறு:–
கேள்வி:– இதேபோல் ஜனாதிபதி, மத்திய அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தால் பிரதமர் ஏற்பாரா?.
பதில்:– மக்கள் நலனுக்காக அந்த ஆய்வு அமைந்து இருந்தால் நாங்கள் வரவேற்போம்.
கேள்வி:– குஜராத் முதல்– மந்திரியாக மோடி இருந்தபோது அங்கு கவர்னர் ஆய்வு செய்தார். அப்போது இதனை காங்கிரஸ் கட்சியின் தூண்டுதல் என்று குற்றம் சாட்டப்பட்டதே?.
பதில்:–அதையும், இதையும் ஒருபோல் எடுத்து கொள்வது நல்லது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.