நெல்லையில், நினைவு நாளையொட்டி வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சி. நினைவு நாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
வ.உ.சி. நினைவு நாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வ.உ.சி. நினைவு நாள்சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மனோகரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் ஏ.பி. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர்.
தே.மு.தி.க.– பா.ம.க.தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஆனந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்தனர். பாரதீய ஜனதா நெல்லை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு உள்பட பலர் வந்து இருந்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை பகுதி செயலாளர் ஸ்ரீதர்ராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் உடையார் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட வ.உ.சி. பேரவை, நற்பணி மன்றம் சார்பிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொருட்காட்சி திடலில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் நடந்தது.