ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை


ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2017 2:00 AM IST (Updated: 18 Nov 2017 8:59 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

திருச்செந்தூர்,

ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தென்கால் மூலம்...

ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் மூலம் திருச்செந்தூர் தொகுதியில் உள்ள 15 குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து, அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டும், ஸ்ரீவைகுண்டம் தென்கால் வழியாக கடம்பாகுளத்தின் கீழ்பகுதியில் உள்ள நல்லூர் கீழகுளம், மேலகுளம், ஆறுமுகநேரி பெரிய குளம், நத்தகுளம், சீனிமாவடி குளம், துலுக்கன்குளம், வண்ணான்குளம், எல்லப்பநாயக்கன்குளம், ஆவுடையார்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

இதேபோன்று ஆத்தூர் மேலகுளம், கீழகுளத்துக்கும் சிறிதளவே தண்ணீர் கிடைத்து உள்ளது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் பிசான சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேற்கண்ட குளங்களில் சுமார் 120 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு கிராமப்புறங்களுக்கும், திருச்செந்தூர், உடன்குடி நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குளங்களில் தண்ணீர் இல்லாததால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் வினியோகம் பெரிதும் தடைபட்டு உள்ளது.

தண்ணீர் வழங்க வேண்டும்

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் நிரம்ப வேண்டிய 7 குளங்களில் கடைசி குளங்களான குலையன்கரிசல் பொட்டல்குளம், கோரம்பள்ளம் குளம் ஆகிய 2 பெரிய குளங்களுக்கு சிறிதளவுகூட தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. கோரம்பள்ளம் குளத்தில் உள்ள 15 பெரிய கிணறுகளில் இருந்து நீரேற்றப்பட்டு கோரம்பள்ளம், அய்யனடப்பு, மறவன்மடம், மாப்பிள்ளையூரணி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது இப்பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது பாபநாசம் அணையில் 100 அடிக்கு மேலாக தண்ணீர் இருந்தும், மக்கள் குடிநீருக்காக அல்லல்படுவது வேதனை அளிக்கிறது. எனவே அணைகளில் தண்ணீர் திறந்து, ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லையெனில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.


Next Story