மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்
மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சியில் 8–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையாக சோழவரம் ஒன்றிய சாலை விச்சூர் கிராமத்திற்கும் தொழிற்பேட்டைக்கும் செல்கிறது. இந்த சாலை ஒருவழி சாலையாக உள்ள நிலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அதிக அளவில் பள்ளங்கள் உருவாகி சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.
சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் சாலையின் குறுக்கே கொம்புகளை நட்டு வாகனங்களை தடுத்து விட்டு நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர்– பொன்னேரி நெடுஞ்சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. பள்ளத்தை நிரப்ப கருங்கல் தூள் பயன்படுத்தப்பட்டன. கருங்கல் தூள் காற்றில் பறப்பதால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கருங்கல் தூள் பறப்பதால் அதை சுவாசிக்கக்கூடிய நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று கூறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொன்னேரி அம்பேத்கர் சிலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நெடுஞ்சாலை துறை இளநிலைபொறியாளர் பிரேம்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சாலையில் தார் கலவை போட்டு பள்ளங்களை மூடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.