அருப்புக்கோட்டை அருகே பக்தர்கள் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்தது 24 பேர் காயம்


அருப்புக்கோட்டை அருகே பக்தர்கள் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்தது 24 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Nov 2017 3:30 AM IST (Updated: 19 Nov 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற பக்தர்களின் வேன் அருப்புக்கோட்டை அருகே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 24 பேர் காயம் அடைந்தார்கள்.

அருப்புக்கோட்டை,

திருப்பூர் எம்.ஜி.ஆர். காலனி மண்ணறை பகுதியை சேர்ந்த விஜயராஜ்(வயது49) என்பவரது ஏற்பாட்டில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் ரெடிமேடு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ரவி என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே 4 வழிச்சாலையில் வாழ்வாங்கி என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் வந்த 24 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் மாரிச்சாமி, கிருஷ்ணபிரியா, கார்த்திகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தார்கள். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சாத்தூர் அருகே சடையம்பட்டியில் 4 வழிச்சாலையில் கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி எதிர்புறம் வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பூவேல்முருகு(50), அவரது மனைவி கல்யாணி(39), மகள் யோகதர்ஷினி(9) ஆகியோரும் பஸ்சில் வந்த கோவில்பட்டியை சேர்ந்த நல்லபெருமாள்(65), திருமலைகுமார்(53) ஆகியோரும் படுகாயம் அடைந்தார்கள்.

காரில் வந்து படுகாயமடைந்த மூவரும் தனியார் மருத்துவமனையிலும் பஸ் பயணிகள் 2 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story