கூடலூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசப்படுத்தும் காட்டு யானை
கூடலூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து நெற்பயிர்களை காட்டு யானை நாசப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தினமும் ஏதாவது ஒரு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்புகள் அல்லது விவசாய பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. போதிய பசுந்தீவனங்கள் கிடைக்காத காரணத்தால் வனங்களை விட்டு காட்டு யானைகள் அதிகளவு வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்து வருகின்றன. இந்த சமயத்தில் எதிரே வரும் பொதுமக்களை துரத்துகின்றன. சில நேரத்தில் மனிதர்களையும் தாக்குகின்றன.
கூடலூர்– முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அள்ளூர்வயல், தொரப்பள்ளி, புத்தூர்வயல், குனில் உள்பட பல குக்கிராமங்கள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை, நெல், இஞ்சி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பக வனத்தில் போதிய பசுந்தீவனங்கள் கிடைக்காததால் அதன் கரையோரம் உள்ள குக்கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இதனால் காட்டு யானைகளின் அட்டகாசத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். அதன்பின்னர் காட்டு யானைகள் வருகை குறைந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி, புத்தூர்வயல், குனில் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் நெல் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது நெற்கதிர்கள் விளைந்து உள்ளதால் இன்னும் சில நாட்களில் விவசாயிகள் அதனை அறுவடை செய்ய உள்ளனர். இதனிடையே ஒரு காட்டு யானை குனில் கிராமத்துக்குள் இரவில் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களை தனது துதிக்கையால் தின்று வருகிறது. மேலும் நெல் நாற்றுகளை மிதித்து நாசப்படுத்தி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8½ மணிக்கு மீண்டும் காட்டு யானை வெளியேறி குனில் கிராமத்தில் உள்ள வயலுக்குள் வந்தது. இதை கண்ட விவசாயிகள், கிராம மக்கள் அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வனத்துக்குள் செல்லாமல் காட்டு யானை கிராம மக்களை துரத்தியது. இதில் ½ ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நாசமானது. காட்டு யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டு யானை கிராமத்துக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.