மத்தியிலும், மாநிலத்திலும் மதவாத, ஊழல் ஆட்சிகளை தூக்கி எறிய கைகோர்ப்போம்; திருநாவுக்கரசர்


மத்தியிலும், மாநிலத்திலும் மதவாத, ஊழல் ஆட்சிகளை தூக்கி எறிய கைகோர்ப்போம்; திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:30 AM IST (Updated: 19 Nov 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் மதவாத ஆட்சியையும், மாநிலத்தில் ஊழல் ஆட்சியையும் தூக்கி எறிய கைகோர்ப்போம் என்று கோவை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

கோவை,

கோவை சிவானந்தா காலனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது கூறியதாவது:–

இந்திரா காந்தி நாட்டின் இரும்பு பெண்மணியாக விளங்கினார். நமது நாட்டுக்கு அனைத்து தரப்பு மக்களும் பயனடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். வங்காள தேசம் என்ற நாடு உருவாக அவர்தான் காரணம். வங்காள தேச நாட்டை உருவாக்கும்போது ஏற்பட்ட போரில், 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரண் அடைந்தனர். இவ்வளவு தொகையில் வீரர்கள் சரண் அடைந்தது உலகையே வியந்து பார்க்க வைத்தது. அனைத்துக்கும் இந்திரா காந்திதான் காரணம்.

இப்போது நாட்டில் மோடி தலைமையில் மத்தியில் மதவாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ரூபாய் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஏழை மக்களின் சுருக்கு பையில் போட்ட பணத்தைதான் வங்கியில் போட வைத்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். மோடிக்கு எதிராக இப்போது அந்த கட்சியின் தலைவர்கள் திரும்பி இருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரியை கூட, எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். அறிவிக்க கூடும். அந்த அளவுக்கு மோடிக்கு மக்கள் மத்தியிலும், கட்சியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குஜராத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பளித்து திருப்புமுனையை ஏற்படுத்துவார்கள்.

தமிழ்நாட்டில் இப்போது முதுகெலும்பற்ற ஆட்சி நடந்து வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் கூட வருமானவரித்துறையினர் சோதனை செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாய்மூடி மவுனிகளாக உள்ளனர். ஜெயலலிதா என்ற குலதெய்வம் குடியிருந்த வீடு என்று கூறிய அவர்கள், இந்த சோதனையை வாய்மூடி வேடிக்கை பார்ப்பதன் காரணம் என்ன?

மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு திகழ்கிறது. எனவே மத்தியில் உள்ள மதவாத பாரதீய ஜனதா ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள ஊழல் ஆட்சியையும் தூக்கி எறிய கைகோர்ப்போம். கோவையில் நடைபெற்றுள்ள இந்த கூட்டம் இதற்கு ஒரு அடித்தளமாக விளங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான சூழலில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. தனியார் கட்டுப்பாட்டில் இருந்த வங்கிகளை இந்திரா காந்தி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பொதுத்துறை ஆக்கியதால்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் வங்கி அதிகாரிகளாக அமர முடிகிறது.

ஈழத்தமிழர்கள் தங்களுக்கான தேசத்துக்கு போராடிய போது 5 போராளி குழுக்களுக்கும் பயிற்சி அளிக்க உதவி செய்தவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி தொலை நோக்கு பார்வையுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசும்போது, அனைவரையும் மேடையில் ஒன்றாக சேர வைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நாட்டில் மதவாதமும், ஊழலும் தலைதூக்கி உள்ளது. இது தூக்கி எறியப்பட வேண்டும் என்று கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலளர் ஈஸ்வரன் பேசும் போது, இந்திரா காந்தி ஆட்சி காலத்தின் போது கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ஆட்சி காலத்தில்தான் கொங்கு மண்ணில் பிறந்த சி.சுப்பிமணியம் பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தார். இந்திரா காந்தி நீண்ட காலம் உயிரோடு இருந்து இருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சினை இருந்து இருக்காது. மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெற்று இருக்காது என்று கூறினார்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுமுன் அன்சாரி பேசும்போது, ஜனாதிபதி தேர்தலின் போது பா.ஜனதா கட்சி தலித் சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி மீரா குமாரை நிறுத்தியது. நான் இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டாலும் கூட கூட்டணி விதியை மீறி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் மீரா குமாரை ஆதரித்து வாக்களித்தோம். ஆனால் தற்போது பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் சிபான்மையினர், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரப்படுகிறது. எனவே மத்தியில் உள்ள பா.ஜனதா கட்சி அகற்றப்பட வேண்டும். என்று கூறினார்.


Next Story