சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்
பெண்ணாடம் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி கிராமத்தில் குடியிருக்க வீடு இல்லாத 36 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2009–ம் ஆண்டு அருந்ததியர் பகுதியில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த குடும்பத்தினர் அங்கு வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், அந்த பகுதியில் உள்ள சேதமடைந்த மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரியும், எரியாத மின் விளக்குகளை சரி செய்ய கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணி அளவில் ஒன்று திரண்டு வந்து, சேறும் சகதியுமான மண் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் கிராம மக்கள் அங்கிருந்து அவர்களாகவே கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.