செல்போன் டவரில் ஏறி போராட்டம் 5-வது முறையாக வாலிபர் கைது


செல்போன் டவரில் ஏறி போராட்டம் 5-வது முறையாக வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2017 5:00 AM IST (Updated: 19 Nov 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய வாலிபர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 33). இவர் ஏதேனும் பிரச்சினைகளுக்காக செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்துவதில் கில்லாடி ஆவார். இதற்காக அவர் 4 முறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக சென்னை அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். இந்தநிலையில் ரவிச்சந்திரன் நேற்று காலை 10.30 மணியளவில் அதே செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் குதித்தார்.

செல்போன் டவர் உச்சியில் இருந்து அவர் துண்டுபிரசுரங்களை வீசினார். அதில், விலைவாசி உயர்த்தியதையும், ஊழலையும், பொதுமக்கள் தற்கொலையையும் கண்டித்து 5-ம் ஆண்டு டவர் ஏறும் போராட்டம் என்ற தலைப்பில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலக வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர் வைத்திருந்தார்.

ரவிச்சந்திரனின் போராட்டம் குறித்து தகவலறிந்து போலீசாரும், தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மணிகண்டன் உள்பட 3 தீயணைப்புபடை வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறினர். ரவிச்சந்திரனிடம் 1 மணி நேரம் சதுர்யமாக பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் ரவிச்சந்திரனை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு இதே நாளில் தான் போராட்டம் நடத்தினார். அப்போதும் அவரை தீயணைப்பு படை வீரர் மணிகண்டன் தான் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story