சினிமாக் காதலும் சமூக சிக்கலும்..


சினிமாக் காதலும் சமூக சிக்கலும்..
x
தினத்தந்தி 19 Nov 2017 11:47 AM IST (Updated: 19 Nov 2017 11:47 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவைப் பார்த்து காதல் கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாகவே இருக்கிறது. சினிமாக் காதலைப் பார்த்துவிட்டு அதுபோல் காதலிப்பது யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துவருமா?

சினிமாவைப் பார்த்து காதல் கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாகவே இருக்கிறது. சினிமாக் காதலைப் பார்த்துவிட்டு அதுபோல் காதலிப்பது யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துவருமா? அந்த காதல் உயிரோட்டமாக இருக்குமா? என்பதை அலசுவோம்!

திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்களிடம் ‘உங்களுக்கு எந்த மாதிரியான பெண் வேண்டும்?’ என்று கேட்டால், அவர்கள் ஒருசில கதாநாயகிகளை குறிப்பிட்டு, அவர்களை போன்ற பெண் வேண்டும் என்று சொல்கிறார்கள். பெண்களிடம் கேட்டால் சில கதாநாயகர்களை போன்று தங்களுக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கிறார்கள். இளைஞர்களிடம், ‘நீங்கள் சினிமாக்களில் எதை அதிகம் ரசிக்கிறீர்கள்?’ என்று கேட்டால், காதல் காட்சிகளைத்தான் பெரிதும் ரசிப்பதாக கூறுகிறார்கள். காதல் காட்சிகள் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, அதுபோன்ற இன்பமான நிகழ்வுகள் தங்கள் வாழ்வில் நடைபெறுவதை விரும்புவதாகவே ஆண்களும், பெண்களும் கூறுகிறார்கள்.

சினிமாக்களில் காதலை பாடம்போல சொல்லும் காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன. காதல் இல்லாத படங்கள் அரிது. அனேக சினிமாக்களில் படத்தின் வெற்றிக்காகவும், சுவாரஸ்யத்திற்காகவும் பெரும்பாலான காதல் காட்சிகள் மிகைப்படுத்தி சித்தரிக்கப்பட்டதாகவே உள்ளன. உதாரணமாக கதாநாயகனும், கதாநாயகியும் விதியின் விளையாட்டாக மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகளைச் சொல்லலாம். நிஜத்தில் அது அரிதினும், அரிதான நிகழ்வு. எதிரெதிர் வீடாய் இருந்தால்தான் அப்படிப்பட்ட வாய்ப்பு உருவாகும். அப்படியே மீண்டும் மீண்டும் சந்திப்பு நிகழ்ந்தால் ஜன்னல் கதவுகள் சடாரென்று சாத்தப்படுவதே யதார்த்தம். இளசுகளின் ஜாடையை அறிந்தால் பெற்றோர் பேய்பிடித்ததுபோல மோதிக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். எதிர்வீடு நிரந்தர பகைவீடாய் மாறிப்போன வரலாறுகள் நிறைய. ஆனால் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகியை பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுவதையும், கண்களில் மின்னல் தெறிப்பதாகவும் காட்டிவிடுகிறார்கள்.

பெரும்பாலான சினிமாக்களில் கதாநாயகி, நாயகனின் காதல் வலையில் வீழ்வதாகவே காட்டப்படுகிறது. பிடிக்காத வில்லனை ஒடுக்கி காதலை கனியச் செய்யும் கதாநாயகர்கள் அதிகம். இப்படி எளிதில் காதல் நிகழ்ந்துவிடும் காட்சிகளைப் பார்க்கும் இளசுகள் நெஞ்சில் காதல் சிறகு முளைக்கிறது. நிஜத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் காதலியை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் அரும்பிவிடுகிறது. அதனால் நடை, உடை, பாவனைகளை விருப்பத்திற்குரிய கதாநாயகன்போல மாற்றிக் கொண்டு காதலியைத் தேடு பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர், விரும்பும் பெண்ணிற்கு எந்த கதாநாயகன் பிடிக்குமோ அவர்களைப்போல தங்களைமாற்றிக் கொண்டு காதல் வலை வீசுவார்கள். அந்த ஸ்டைல், பளபளப்பான தோற்றமெல்லாம் சிறிது காலத்திற்குத்தான் என்பதை அறியாமலே வேகத்தில் காதலுக்குள் விழும் பெண்களும் இருக்கிறார்கள்.

சினிமாக்களில் கதாநாயகன், காதலியின் போன் நம்பரையும், வீட்டு முகவரியையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். அதற்காக சில உபாயங்களை கடைப்பிடிப்பார். ஆனால் நிஜத்தில் அதே பாணியைப் பின்பற்றினால், உதை வாங்க வேண்டி இருக்கும். மிஸ்டுகால் வாய்ப்பில் காதலாகும் வாய்ப்பு நிஜத்திலும் சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் சினிமாக்களில் அது போன்ற காட்சிகள்தான் நிறைந்துகிடக்கின்றன.

ரசிகர்களை ஈர்ப்பதற்காக சினிமாக்களில் உடையிலும், காட்சி யிலும் கவர்ச்சியும், ஆபாசமும் சேர்க்கப்படுவதுண்டு. உதாரணமாக பாடல்கள், முத்தக்காட்சிகளைச் சொல்லலாம். நிஜத்தில் ஆடிப்பாடவும் முடியாது. பொது இடங்களில் கட்டிக் கொள்ளவும், முத்தமிடவும் முடியாது. அது நம் பண்பாடும் அல்ல. ஆனால் சினிமாவில் அது ஒரு பண்பாடு ஆகிவிட்டது.

நிஜத்தில் ஒரு காதல் நிறைவேற வெகுகாலம் காத்திருக்கவேண்டும். எவ்வளவோ தியாகங்கள் செய்யவேண்டியதிருக்கும். ஆனால் சினிமாவில் உடனுக்குடன் நிறைவேறுவதுபோல் காட்டி விடுவார்கள். நிஜத்தில் காதலன், காதலியை சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு. ஒருவித ஈர்ப்பால் காதல் மலர்ந்துவிட்டாலும், அவளை எப்போது பார்ப்போம், காதலை எப்படிச் சொல்வது, காதலுக்கு சம்மதம் கிடைக்குமா? ஒருவேளை மறுத்துவிட்டால் என்ன செய்வது, அவளது விருப்பத்தையும் அறிந்து கொள்ள முடியுமா? என்று ஆயிரம் சிந்தனைகளும், பதற்றமும் மனதில் படபடப்பை உருவாக்கும். இந்தக் குழப்பங் களுக்கு தெளிவு கிடைப்பதற்குள் காலங்கள் உருண்டோடிவிடும். சிலர் வருடக் கணக்கில் காத்திருந்து காதலைச் சொல்வார்கள். ஆனால் சினிமாவில் காதலைச் சொல்வது கதாநாயகனுக்கு ரொம்ப எளிதான காரியம். நினைத்த மாத்திரத்தில் சொல்லிவிடுவார். சிறுவர்களை, நண்பர்களை தூது அனுப்புவார். அல்லது வில்லனை ஒழிப்பது உள்ளிட்ட சாகசங்களால் காதலியையே தன் பின்னால் வர வைத்துவிடுவார். இதெல்லாம் நிஜத்திலும் சாத்தியம் என்று நினைத்து காதல்வசப்படுபவர்கள்தான் சிக்கல் வரும்போது தேம்பித் தவிக்கிறார்கள்.

பழைய சினிமாக்களில் கதாநாயகனை நேர்மையானவனாக, வசதி படைத்தவனாக காட்டியிருப்பார்கள். அவன் ஏழைப் பெண்ணை காதலிப்பதுபோல சித்தரித்திருப்பார்கள். சமீப கால படங்களில் சாதாரண இளைஞனை ஹீரோவாக காட்டும் கதைகள் பெருகிவிட்டன. அந்த படங்களில் கதாநாயகர்களே வேலையின்றி ஊதாரித் தனமாக சுற்றுவதும், பெண் களிடம் கேலி பேசி காதலில் பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார்கள். அவர்களின் வேடிக்கை, வெகுளித்தனம், துடுக்குத்தன வீரம் ஆகியவற்றில் மயங்கி பெண்கள் காதலிப்பதாக காட்டப்படுகிறது.

இதுவும் இன்றைய இளைஞர்களுக்கு காதலை தவறான கோணத்தில் புரிய வைத்து விடுகிறது. காதலிக்க எந்தத் தகுதியும் தேவையில்லை. எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்ற அசட்டு தைரியத்தை வரவழைக்க அத்தகைய சினிமா காட்சிகள் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றன. காதலின் மயக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு காதலியை கைப்பிடித்த பின்பு நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி எந்த பகுத்தறிவும் இல்லை.

நிஜ வாழ்வில் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் நிறைய உண்டு. ஆனால் அந்த சிக்கல்களையெல்லாம் சினிமா கதாநாயகன் எளிதாக தீர்த்துவிடுவார். முடிவு சுபமாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் முடிவே தெரியாத பிரச்சினைகள் அதிகம். சாதி மத பிரச்சினைகள், கவுரவப் பிரச்சினைகளை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கும் காதல் தம்பதிகள் நிறைய உள்ளனர். 

Next Story