இலவச அரிசி வழங்கக்கோரி கவர்னருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்


இலவச அரிசி வழங்கக்கோரி கவர்னருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:45 AM IST (Updated: 20 Nov 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

இலவச அரிசி வழங்கக்கோரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிரண்பெடி ஆய்வு பணியை பாதியில் முடித்துக்கொண்டு புதுவைக்கு திரும்பினார்.

நெட்டப்பாக்கம்,

கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை தோறும் கிராமப்புறங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டசோழநல்லூருக்கு கவர்னர் கிரண்பெடி நேற்று காலை 7.45 மணியளவில் வருகை தந்தார். இவரை அரசு அதிகாரிகள், கிராம மக்கள் வரவேற்றனர்.

பின்னர் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் கவர்னர் கிரண்பெடி தரிசனம் செய்தார். தொடர்ந்து சுய உதவிக்குழு பெண்களுடன் கிரண்பெடி பந்து விளையாடினார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள், திடீரென்று இலவச அரிசி வழங்குவதற்கு ஏன் தடையாக உள்ளர்கள் என்று கவர்னரிடம் நேருக்கு நேராக கேள்வி எழுப்பினர். உடனே அங்கிருந்த போலீசார் கேள்வி எழுப்பிய பெண்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆண்களும், பெண்களும், கவர்னரே வெளியேறு வெளியேறு என்று கோஷமிட்டபடி கிரண்பெடியை நோக்கி சென்றனர். இவர்களை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

இதை பார்த்த கவர்னர் கிரண்பெடி, கிராம மக்களை சமாதானம் படுத்தும் விதமாக அங்குள்ள மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நான் நிறுத்தவில்லை, தகுதியானவர்களுக்கு இலவச அரிசி வழங்கவேண்டும் என துறை அமைச்சரிடம் தெரிவித்து விட்டேன். இலவச அரிசி வழங்குவதற்கான கோப்புகளில் நான் கையெழுத்திட்டேன். என்னிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என்றார்.

மேலும் அவர் பேசுகையில், நான் சொல்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் ஏதேனும் புகார்கள் இருந்தால் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 4 முதல் 7 மணி வரை கவர்னர் மாளிகையில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்றார். இதற்கு பொதுமக்கள் பொய் பேசாதே... பொய் பேசாதே... என கோஷமிட்டனர்.

கிராம மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஆய்வு பணியை பாதியிலேயே முடித்துக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் கவர்னர் கிரண்பெடி காரில் புறப்பட்டுச் சென்றார். நிகழ்ச்சியில் பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி மலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதுவையில் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல்போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகூர், ஏம்பலம் பகுதியில் ஆய்வு பணிக்கு சென்ற கவர்னர் கிரண்பெடியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தற்போது பண்டசோழ நல்லூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். 

Next Story