கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப சாவு


கிணற்றில் குளித்த போது பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப சாவு
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

அவினாசி,

தஞ்சாவூரை சேர்ந்தவர் மரியபீவி (வயது 42), இவரது மகன் அப்துல்கலாம் (16). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வந்தனர். அவினாசி வி.என்.வி. காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். மரியபீவி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். அப்துல்கலாம் அவினாசி அரசு உயர் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

நேற்று விடுமுறை என்பதால் மதியம் 2 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு அப்துல்கலாம் சைக்கிளில் சென்றான். அவினாசி சீனிவாசபுரம் பகுதிக்கு வந்த மாணவன் அங்குள்ள ஆழமான பொதுக்கிணற்றில் குளிக்க முடிவு செய்தான். இதற்காக தனது சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஷூ ஆகியவற்றை கிணற்று மேட்டில் கழற்றி வைத்து விட்டு தண்ணீரில் குதித்துள்ளான். அங்கு வேறு சில வாலிபர்களும் குளித்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிணற்றில் குதித்த அப்துல்கலாம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கிணற்றுமேட்டில் சைக்கிள், மற்றும் ஆடைகள் இருந்ததுடன், கிணற்றுக்குள் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.

அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி சோனை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதாள கரண்டியுடன் கிணற்றுகள் இறங்கி தேடினர். சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின்னர் அப்துல்கலாமை பிணமாக மீட்டனர். தண்ணீரில் குதித்ததில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் “சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இந்த பொதுக்கிணறு 150 அடி ஆழம் உள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த கிணற்றில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஊற்றுமூலம் கிணற்றில் தற்போது 120 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

அப்பகுதி பொதுமக்களுக்கு இந்த கிணற்றுநீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோல அசம்பாவித சம்பவம் நடைபெறுவதை தடுக்க அங்கு யாரும் குளிக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்“ என்றனர். 

Next Story