வருமான வரி சோதனை தொடரும் சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டம்


வருமான வரி சோதனை தொடரும் சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2017 5:00 AM IST (Updated: 20 Nov 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்ற பெயரில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் என ஒரே சமயத்தில் 187 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை,

கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 5 நாட்கள் இடைவிடாமல் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனையில் ரூ.1,480 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது. மேலும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகள், ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளின் கையில் சிக்கின.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், அவருடைய சகோதரி கிருஷ்ணபிரியா, கணவர் கார்த்திகேயன், மற்றொரு சகோதரி ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் மணிக்கணக்கில் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், அ.தி.மு.க. (அம்மா) கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி, ஜெயா டி.வி. பொதுமேலாளர் நடராஜன், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில், வருமான வரி சோதனையை தொடர அதிகாரிகள் திட்டமிட்டனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் அன்றைய தினம் இரவே சோதனை நடத்தப்பட்டது.

அங்குள்ள பூங்குன்றன் அறை, சசிகலாவின் 2 அறைகளில் சோதனை நடைபெற்றது. 3 அறைகளிலும் இரவு தொடங்கிய சோதனை அதிகாலை வரை நீடித்தது.

ஆனால், ஜெயலலிதாவின் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை எதையும் நடத்தவில்லை.

அந்த அறையில் சோதனை நடத்தினால், அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். குறிப்பாக, அவர் உயில் எதுவும் எழுதி வைத்திருந்தால், கண்டிப்பாக அவை வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிகிறது. எனவே, விரைவில் முறைப்படி அனுமதி பெற்று ஜெயலலிதா அறையிலும் சோதனையிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பகலில் சோதனை மேற்கொண்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால், அவருடைய அறையையும் இரவோடு, இரவாக சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் உள்ள பினாமி சொத்துகளை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

தற்போது, ஜெயலலிதாவுடைய சொத்துகள் யார் பெயரில் உள்ளன?, மற்றவர்கள் பெயரில் இருந்தால் அந்த ஆவணங்களில் ஜெயலலிதா சுயநினைவோடு கையெழுத்து போட்டாரா? என்பதை விசாரித்து, அதில் உள்ள ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே நடத்திய சோதனையை போல் மீண்டும் மெகா சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த அதிரடி சோதனை பட்டியலில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு, சிறுதாவூர் பங்களாவும் இடம் பெற்று இருப்பதாகவும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வீடுகளும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மீண்டும் எங்கெங்கு சோதனை நடத்துவது, அதிகாரிகள் குழு எங்கு கூடுவது, எந்த நேரத்தில் சோதனை மேற்கொள்வது போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை பட்டியல் தயாரான பின்னர் அதனை டெல்லியில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். அந்த வாரியம் ‘பச்சை கொடி’ காட்டியவுடன் தங்களது அடுத்த அதிரடி வேட்டையை வருமான வரி அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரும் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இதுவரை 187 இடங்களில் நடத்திய சோதனையில் எதிர்பார்த்தற்கும் மேலாகவே பல ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் இந்த சோதனையின் போது எங்களுக்கு கிடைத்தன. பல ஆவணங்களும் சிக்கின.

இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் மேலும் பலருடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் எங்களுடைய சோதனை இனியும் தொடரும்.

நாங்கள் சோதனை நடத்திய இடங்களின் உரிமையாளர்கள், “எங்களை குறி வைத்து சோதனை நடத்துகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக சோதனை நடத்துகிறார்கள்” என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆனால் வருமான வரித்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது.

பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். அதில், தமிழக அரசின் மூத்த அதிகாரிகளும் அடங்குவார்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். அதுமட்டும் அல்லாமல், இந்த வருமான வரி சோதனைக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் எங்களுக்கு குவிய தொடங்கி இருக்கிறது.

அந்த தகவலின் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களிலும் அவர்கள் சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சமுதாயத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வருமான வரிசோதனையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த சோதனையின் மூலம் மக்கள் தெரிந்து கொண்டு உள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் இந்த சோதனைக்கு பிறகு, நம் மீதும் அதிரடி நடவடிக்கை பாயுமோ என்று பயந்து, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில், அங்கு சசிகலா பயன்படுத்திய 2 அறைகளில் இருந்து தகவலை சேகரித்து வைக்கும் எலக்ட்ரானிக் கருவிகளை திருடி செல்ல முயற்சி நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவேதான் அங்கு உடனடியாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஒரு லேப்-டாப், டேப்லட், 6 பென் டிரைவ்கள், கணினி, போலி கம்பெனிகள் தொடங்கியதற்கான உண்மையான ஆவணங்கள் ஆகியவை கிடைத்தன.

அதே நேரத்தில் நாங்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் முழுமையாக சோதனை நடத்தவில்லை. அங்கு மீண்டும் சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். பூங்குன்றனிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. போலி கம்பெனிகள் தொடர்பான ஆவணங்கள் சென்னையில் உள்ள ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story