சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை: ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது
நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 8 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
நவிமும்பை ஜூயி நகரில் உள்ள பரோடா வங்கி கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன் 30 லாக்கர்களை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் அள்ளிச்சென்றனர். கொள்ளையர்கள் வங்கி உள்ள கட்டிடத்தில் இருக்கும் ஒரு கடைக்குள் இருந்து, வங்கியின் லாக்கர் அறை வரை சுமார் 50 அடி நீளத்திற்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 18 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சுரங்கம் தோண்டப்பட்ட கடையை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கேனா பச்சன் பிரசாத் என்பவர் கடந்த மே மாதம் முதல் வாடகைக்கு வாங்கி இருந்தார். எனவே அவருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் போலீசார் அவரை பிடிக்க ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றனர்.ஆனால் அவர் உத்தரபிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. இதையடுத்து போலீசார் அவரை பிடிப்பதற்காக உத்தரபிரதேசத்திற்கு விரைந்து உள்ளனர்.
இந்தநிலையில், போலீசார் கொள்ளையில் தொடர்புடைய 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் மேலும் ஒரு சிக்கினார். அவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர்களுக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், அவர்கள் கோரேகாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ராவன் ஹெக்டே, மோமின் கான், விக்ரோலியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஞ்சன் மகந்தி மற்றும் கோவண்டியை சேர்ந்த ஹஜித் பேய்க் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் சுரங்கம் தோண்டிய போது, அகற்றப்பட்ட மண் கழிவுகளை அள்ளி சென்றவர்கள் என கூறப்படுகிறது.இதையடுத்து கைதான 4 பேரும் வாஷி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு வாரம் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வங்கி கொள்ளையில் தொடர்புடைய மேலும் 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.