புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்


புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 20 Nov 2017 3:51 PM IST (Updated: 20 Nov 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

நாள்தோறும், ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட நூலக வளாகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 50-வது தேசிய நூலக வார விழா மற்றும் புத்தக அறிமுக விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கதிரவன் நேற்று பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நூலகர்களுக்கு முக்கியமான மாதம். இந்த மாதத்தில் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 7 நாட்கள் இந்தியா முழுவதும் நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்க கூடிய பாடத்திட்டங்களை படிப்பதுடன் நூலகத்திலும் படித்து அறிவு திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் நூலகம் வளர்ச்சி பெறவேண்டும். நாள்தோறும் ஒரு மணி நேரமாவது புத்தம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தினசரி நாளிதழ்களில் வரும் வேலைவாய்ப்பு செய்திகள், அயல்நாட்டு செய்திகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை செயல் அலுவலராக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை உள்ளார். அவரை போல மாணவ, மாணவிகள் நீங்களும் நன்றாக படித்து நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டும்.

நல்ல புத்தங்களை படிப்பதின் மூலம் நல்ல பண்பு திறன் பெற முடிகிறது. அதன் மூலம் நம்மை சுற்றி இருப்பவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேசும் போது அன்பை வெளிபடுத்த முடிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 143 பொதுநூலகங்களில் மொத்தம் 20 லட்சத்து 25 ஆயிரத்து 595 நூல்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 486 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். புரவலர்களாக 2,319 பேர் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக துறை இயக்கம் சார்்்பில் 2017-ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது பெற்ற புவனேஸ்வரியை கலெக்டர் கதிரவன் பாராட்டினார். மேலும் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஓவியம், பேச்சு, பாட்டு, கட்டுரை, வினாடி-வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், கவிஞர்் கணேசன், தகடூர் தமிழ் கதிர், நூலக ஆய்வாளர் ஆனந்தி, நூலகர் பிரேமா மற்றும் வாசகர்கள், நூலகர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story