புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்ட நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்ட நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2017 3:55 PM IST (Updated: 20 Nov 2017 3:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா புலிக்கல் ஊராட்சியில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். துணை இயக்குனர் வேடியப்பன், கால்நடை மருத்துவர்கள் ஆசைத்தம்பி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் சார்பில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலிக்கல் ஊராட்சியில் உள்ள கிளை கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்பட்டு கால்நடை மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. புலிக்கல், தும்பலஅள்ளி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இந்த மருந்தகத்தில் சிகிச்சை அளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் பேளாரஅள்ளி, புளியம்பட்டி, ஜக்கசமுத்திரம், வடுகம்பட்டி, தொட்டம்பட்டி ஆர்.எஸ். ஆகிய 5 இடங்களில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 22,528 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 90,112 ஆடுகள் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மாணிக்கம், கோபால், பாலக்கோடு தாசில்தார் அருண் பிரசாத், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி, சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story