பவானி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல்- வெள்ளி பொருட்கள் திருட்டு


பவானி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல்- வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 21 Nov 2017 4:45 AM IST (Updated: 21 Nov 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றதுடன், அங்கிருந்த பீரோவை தூக்கி காட்டுப்பகுதியில் வீசிச்சென்றனர்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பை அருகே கருக்குப்பாளையத்தில் உள்ள சிறிய குன்றின் மீது ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருந்து வருகிறார். இந்த கோவிலில் 2 பீரோக்கள் மற்றும் 2 உண்டியல்கள் உள்ளன. ஒரு பீரோ சுவரில் பதிக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு பீரோ 6½ அடி உயரம் கொண்டது. இதேபோல் கோவில் முன்பு 2 அடி உயர உண்டியல் பதிக்கப்பட்டிருந்தது. மற்றொரு உண்டியல் சில்வர் குடத்தின் வாய் பகுதியில் மஞ்சள் துணி கொண்டு கட்டப்பட்டிருந்தது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பூஜையை முடித்து விட்டு பூசாரி மணிகண்டன் சென்று விட்டார். பின்னர் மீண்டும் நேற்று காலை பூஜை செய்வதற்காக மணிகண்டன் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் பதறியடித்து கொண்டு கோவிலின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கோவிலில் இருந்த பீரோ, உண்டியல் ஆகியவற்றை காணவில்லை. மேலும் கோவிலில் இருந்த மற்றொரு பீரோ உடைக்கப்பட்டு இருந்ததுடன், சில்வர் குடத்திலான உண்டியல் காணிக்கை எதுவுமின்றி தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

உடனே இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

பின்னர் அங்கு சுவரில் பதிக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பூஜை பொருட்கள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடினர். மேலும் கோவிலில் இருந்த சில்வர் குடத்திலான உண்டியலில் இருந்த காணிக்கை அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமின்றி உண்டியல் மற்றும் பீரோவை அப்படியே அலாக்காக தூக்கி கொண்டு கோவிலை விட்டு மர்ம நபர்கள் வெளியே வந்து உள்ளனர். கோவிலில் இருந்து 500 அடி தூரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு பீரோவை தூக்கி சென்ற மர்ம நபர்கள் அதை உடைத்து பார்த்தனர். ஆனால் கோவிலில் உள்ள சாமிக்கு தேவையான விபூதி, திருமஞ்சனம் போன்ற பூஜை பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பீரோவை காட்டுப்பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்போது 2 அடி உயர உண்டியலை கையோடு தூக்கி சென்றதும்,’ தெரியவந்தது.

கோவிலில் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் கூடி விட்டனர்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story