திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 21 Nov 2017 11:37 AM IST (Updated: 21 Nov 2017 11:37 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனஞ்சேரி கிராமத்தில் மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை வழங்காததை கண்டித்து 400-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெண்கள் கைக்குழந்தைகளுடன் இந்த முற்றுகையில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-
மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏரி, குளம், கால்வாய் தூர்வாருதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தோம்.

ஆனால் இந்த ஆண்டு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் இதுவரை சரிவர எங்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு வேலை தர மறுக்கிறது. 700 பேருக்கும் மேல் பெண்கள் இருக்கிறோம். ஆனால் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டும் வேலை தருகின்றனர். அதிலும் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்த பெண்களும் உள்ளனர். இந்த ஆண்டு முடிவதற்கு போதிய நாட்கள் இல்லாததால் அனைவருக்கும் வேலை கிடைக்காது என்பதால் கலெக்டரிடம் முறையிட முற்றுகையில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அவர்கள், மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story