கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2017 1:45 PM IST (Updated: 21 Nov 2017 1:45 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதிகளான பவர்ஹவுஸ் காலனி, அம்பேத்கர் நகர், சீனிவாசா காலனி ஆகிய பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பர்வையிட்டு ஆய்வு செய்தார். பவர்ஹவுஸ் காலனியில் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்த கலெக்டர் கதிரவன், வீடுகளில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், உரல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து கழிவு நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

பின்பு வீட்டு பகுதியில் கழிவு பொருட்கள் மற்றும் குடிநீர் தொட்டி சுகாதாரமாக வைத்திருக்காத மூர்த்தி என்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும், கீதாபிரகாஷ் என்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். பின்பு வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகள் மற்றும் மேல்தளத்தில் காலியாக உள்ள இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

தேவையற்ற பொருட்களை உடனடியாக குப்பை வண்டிகள் வரும் பொழுது அகற்ற வேண்டும். தரைதள நீர்த்தேக்க தொட்டிகள், மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நன்கு மூடி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கொசு புழுக்களை ஒழிக்க முடியும் என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, 50 தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் கதிரவன், தேனீர் வழங்கினார். மேலும் சுகாதார பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள் என்றும், தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், தாசில்தார் கன்னியப்பன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story