போலி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு


போலி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Nov 2017 4:02 PM IST (Updated: 21 Nov 2017 4:02 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்மாதிமங்கலத்தில் போலி ஊராட்சி செயலாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் பொதுமக்கள் வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் ஜவ்வாதுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜவ்வாதுமலை அத்திப்பட்டில் ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி பள்ளி கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியை தண்டராம்பட்டு புத்தூர் செக்கடி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தண்டராம்பட்டிற்கு மாற்றப்பட்டால் இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு இடைநிறுத்தலுக்கு வழி வகுத்து விடும். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜவ்வாதுமலையிலேயே நிரந்தரமாக இடம் தேர்வு செய்து பள்ளி அமைத்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி கோவில்மாதிமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்மாதிமங்கலம் ஊராட்சியில் பொறுப்பு ஊராட்சி செயலாளராக ஜெயபால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் எந்தவித பணியினையும், செய்யாமல் முறைகேடாக மாத சம்பளம் மட்டும் வாங்கி கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தன்னை கோவில்மாதிமங்கலம் ஊராட்சி செயலாளர் என்று கூறி வெற்று வாக்கு றுதிகளை கொடுத்து பொதுமக்களை நம்ப வைத்து பல்வேறு முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

போலி ஊராட்சி செயலாளர் குறித்து நேரடியாகவும், புகார் மூலமாகவும் கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, போலி ஊராட்சி செயலாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story